எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் - ஹஸ்மத்துல்லா ஷாஹிதி!
உலகக்கோப்பை தொடரின் 9ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாகித் 80 ரன்களும், அஸ்மத்துல்லா 62 ரன்களும் விளாசினர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களையும் வீழ்த்தினார்.இதன்பின் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபாரமான சதத்தால் 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடுய ரோஹித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்களும், விராட் கோலி 56 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில், தோல்விக்குப்பின் பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, “இந்தியாவின் பேட்டிங் வரிசை மிக நீண்டது. எனவே நாங்கள் குறைந்தபட்சம் 300 ரன்கள் ஆவது எடுப்பதற்கு திட்டமிட்டு இருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இந்த விக்கெட் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது.
நாங்கள் அதிக ரன் எடுத்து இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க விரும்பினோம். ஆனால் இந்தியா அடுத்தடுத்த விக்கெட்டுகளை கடைசி நேரத்தில் வீழ்த்தியது எங்களால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம். நாங்கள் ஆரம்பத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்த பொழுது ஓமர்ஸாய் இடம் டாட் பந்துகள் பற்றி கவலைப்பட வேண்டாம் நாம் முதலில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவோம் என்று கூறினேன்.
இன்னும் எங்களிடம் ஏழு போட்டிகள் இருக்கிறது. அந்த ஆட்டங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அடுத்து வரும் போட்டிகளில் செயல்படுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.