பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அந்தவகையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 32 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை எட்டவுள்ளார். மேற்கொண்டு இந்த மைல்கல்லை எட்டும் இரண்டாவது வங்கதேச வீரர் எனும் சாதனையையும் அவர் படைப்பார். 

Advertisement

இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் வீரர் தமிம் இக்பால் வங்கதேச அணிக்காக 387 போட்டிகளில் விளையாடி 15,192 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 25 சதங்கள் மற்றும் 94 அரைசதங்களும் அடங்கும். அதேசமயம் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வங்கதேச அணிக்காக இதுநாள் வரை 461 போட்டிகளில், 509 இன்னிங்ஸ்களில் விளையாடி 14,968 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 19 சதங்கள் மற்றும் 82 அரைசதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் வங்கதேச அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் முதலிடத்தில் உள்ளார். அதன்படி, இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 10 சதம், 27 அரைசதங்களுடன் 5,676 ரன்களை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தமிம் இக்பால் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 சதம், 31 அரைசதங்கள் என 5,134 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.

பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News