பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய பிரிஸ்பேன் அணிக்கு ஜோஷ் பிரௌன் - காலின் முன்ரோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜோஷ் பிரௌன் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மெக்ஸ்வீனி 9, ரென்ஷா 5, சாம் பில்லிங்ஸ் 3 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்த கேப்டன் காலின் முன்ரோ 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, பால் வால்டரும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும் முன் மழை பெய்த காரணத்தால் ஹாபர்ட் அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 16 ஓவர்களில் 118 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் காலெப் ஜெவெல் 4, மெக்லிஸ்டர், சாம் ஹைன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், பென் மெக்டர்மோட் 16 ரன்களிலும், கோரி ஆண்டர்சன் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இணைந்த நிகில் சௌத்ரி - டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகில் சௌத்ரி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் டிம் டேவிட் 3 பவுண்டரி ஒரு சிக்சர் என 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் ஜோர்டன் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.

அவர்களைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த நிகில் சௌத்ரி 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 55 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 16 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரிஸ்பேன் அணி தரப்பில் ஸேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்ஸர் ஜான்சன், பால் வால்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஒரு ரன் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஸேவியர் பார்ட்லெட் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News