பிபிஎல் 13: மேத்யூ வேட் அதிரடி; ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அபார வெற்றி!

Updated: Sat, Dec 23 2023 21:38 IST
பிபிஎல் 13: மேத்யூ வேட் அதிரடி; ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)

பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோ கிளார்க் மற்றும் டி காக் இருவரும் தலா 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேக் ஃப்ரெசர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் மேடின்சன் 18 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஃபிஞ்ச் - நாதன் வெல்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஆரோன் ஃபிஞ்ச் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாதன் வெல்ஸ் 3 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 40 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தனர். ஹரிகேன்ஸ் அணி தரப்பில் நாதன் எல்லிஸ், பேட்ரிக் தூலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர் கலெப் ஜெவெல் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த மேத்யூ வேட் - ரைட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

அதன்பின் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 63 ரன்களை விளாசிய ரைட் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ வேடும் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாம் ஹைனும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் - கோரி ஆண்டர்சன் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு உதவிய மேத்யூ வேட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை