14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி தண்டர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணியில் சாம் கொன்ஸ்டாஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் டேவிட் வார்னரும் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் பான்கிராஃப்ட் - ஒலிவியர் டேவிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பான்கிராஃப்ட் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஒலிவியர் டேவிஸ் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 8 ரன்னிலும், டேனியல் சாம்ஸ் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் பான்கிராஃப்ட் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 70 ரன்களையும், சாம் பில்லிங்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. சிக்ஸர்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன், பென் துவர்ஷுயிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு ஜோஷ் பிலீப் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 13 ரன்னிலும், ஜோஷ் பிலீப் 35 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஜேக் எட்வர்ட்ஸ் 28 ரன்னிலும், கேப்டன் ஹென்றிக்ஸ் 17 ரன்னிலும், லச்லன் ஷா 8 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த ஜோர்டன் சில்க் மற்றும் பென் துவர்ஷுயிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்டன் சில்க் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களையும், பென் துவர்ஷுயிஸ் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் சிட்னி தண்டர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட் பென் துவர்ஷுயிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News