பிக் பேஷ் லீக் டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து அடிலெய்ட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் அணிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் மற்றும் கிறிஸ் லின் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரம்பம் முதலே பவுண்டரிகளாக விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயரத்தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய மேத்யூ ஷார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 121 ரன்களை எட்டியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் லின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 13 ரன்களுக்கும், ஒல்லி போப் 6 ரன்களுக்கு என நடையைக் கட்ட, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மேத்யூ ஷார்ட் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 10 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 109 ரன்களை எடுத்திருந்த கையோடு மேத்யூ ஷார்ட் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த அலெக்ஸ் ரோஸ் 19 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்து அணியை வலிமையான நிலையை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களைக் குவித்தது. 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஜேக் வுட் மற்றும் மைக்கேல் நேசர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மைக்கேல் நேசர் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நாதன் மெக்ஸ்வீனி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜேக் வுட் 29 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய நாதன் மெக்ஸ்வீனியும் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ ரென்ஷாவும் 34 ரன்களோடு நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஸ்பென்ஸர் ஜான்சன் 27 ரன்களையும், மேக்ஸ் பிரைண்ட் 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடிலெய்ட் அணி தரப்பில் டி ஆர்சி ஷார்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் சதமடித்த மேத்யூ ஷார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News