PAK vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; பென் ஸ்டோக்ஸ் விலகல்!

Updated: Sat, Oct 05 2024 22:19 IST
Image Source: Google

இங்கிலாந்து டெஸ்ட் அணி கடந்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

இதனையடுத்து இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன. இதையடுத்து பாகிஸ்தான் சென்றடைந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிர்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டிக்காக இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. முன்னதாக தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த ஸ்டோக்ஸ், இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகினார். அதன்பின் காயத்தில் இருந்து மீண்ட அவர் பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்ததுடன், கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் செயல்படவுள்ளார். அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸாக் கிரௌலியும் மீண்டும் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேற்கொண்டு இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளார் ஜேக் லீச் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர்த்து அறிமுக வீரரான பிரைடன் கார்ஸுக்கும் இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கே), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜேக் லீச், ஷோயப் பஷீர். 

Also Read: Funding To Save Test Cricket

முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், மிர் ஹம்சா, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃப்ராஸ் அகமது, ஷஹீன் ஷா அஃப்ரிடி. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை