BGT 2024: பெர்த்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியானது முதல் இன்னிங்ஸில் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் யஷஸ்வி ஜெஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் ரெட்டி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பந்த் 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி தரபபில் ஜோஷ் ஹெசில்வுட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 26 ரன்களையும், அலெக்ஸ் கேரி 21 ரன்களையும் சேர்த்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஏல் ராகுல் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்கம், மறுபக்கம் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 161 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பொறுப்புடன் விளையாடியதோடு, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30ஆவது சதத்தையும் பதிவுசெய்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 100 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, பாட் கம்மின்ஸ், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த டிராவிஸ் ஹெட் சதத்தை நெருங்கிய நிலையில் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 47 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 36 ரன்களுக்கும், மிட்செல் ஸ்டார்க் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 238 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணி தரப்பில் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய முதல் அணி எனும் சாதனையும் இந்தியா படைத்துள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.