காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ராகுல்; வைரலாகும் காணொளி!
அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது ஷமி ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதன்படி இந்திய அணியைச் சேர்ந்த வீரர்களே இரு குழுக்களாக பிரிந்து தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பயிற்சியின் போது இந்திய வீரர் கேஎல் ராகுல் காயமடைந்ததுடன், களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏனெனில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுகிறார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வீரராக கேஎல் ராகுல் பார்க்கப்பட்டார். ஆனால் பயிற்சியின் போதே அவர் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியதால் முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு கேஎல் ராகுல் இன்றைய தினம் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார். இதனால் ராகுல் நிச்சயம் முதல் போட்டிக்காக தேர்வில் நிச்சயம் இருப்பார் என்பது உறுதியானது. இந்நிலையில் கேஎல் ராகுல் காயமடைந்தது, காயத்தில் இருந்து மீண்டும் பயிற்சி மேற்கொண்டது மற்றும் அவரது காயம் குறித்து மருத்துவர் கூறியது உள்ளிட்டவற்றை பிசிசிஐ காணொளியாக வெளியிட்டது. தற்சமயம் பிசிசிஐ வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.