பும்ரா விளையாடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - ஷுப்மன் கில்
Anderson-Tendulkar Trophy: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாஅவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. மறுபக்கம் இந்திய அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விக்கும் இதுவரை பதில் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது குறித்த இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஜஸ்பிரித் பும்ரா அணி தேர்வில் நிச்சயம் உள்ளார். நாங்கள் தற்போது 20 விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்கள் எடுக்கக்கூடிய சரியான கூட்டணியை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். இன்று கடைசி முறையாக விக்கெட்டைப் பார்த்த பிறகு அணி தேர்வு குறித்த இறுதி முடிவை எடுப்போம். பும்ரா இல்லாமல் விளையாடுவது கடினமாகதான் இருக்கும் ஆனால் இறுதியில், எங்கள் அணியில் இந்தியாவின் சிறந்த வீரர்கள் உள்ளனர். இது கடினம்தான் ஆனால் முடியாதது அல்ல.
மற்ற வீரர்கள் தங்கள் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு நாட்டிற்காக விளையாடுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக, எங்களிடம் திறமைசாலிகள் நிறைந்த ஒரு பெரிய குழு உள்ளது, அதனால்தான் நாங்கள் இங்கு போட்டியிட முடிகிறது” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகான பதில் நாளை ஆட்டம் தொடங்கும் போது தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.