வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அணியில் கெவின் சிக்ளேர் 17 ரன்களிலும், ஷாய் ஹோப் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இருவரும் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 69 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அசாம் கான் 2 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய கீமோ பால் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரான் ஹெட்மையர் 11 சிக்ஸர்களை விளாசி 91 ரன்களை எடுத்திருந்த நிலைல் ஆட்டமிழந்தார். 

Advertisement

இதன் காரணமாக கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களைச் சேர்த்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் கைல் மேயர்ஸ், ஆன்ரிச் நோர்ட்ஜே, பெர்மால், மெஹ்சின், ஓடியன் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பேட்ரியாட்ஸ் அணியில் எவின் லூயி 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கைல் மேயர்ஸும் 28 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் - ரூதர்ஃபோர்ட் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடிய ஃபிளெட்சர் தனது அரைசதத்தைக் கடந்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரூதர்ஃபோர்ட் 3 பவுண்ட்ரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஷ் கிளார்க்சன், ஓடியன் ஸ்மித் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். மேற்கொண்டு அபாரமாக விளையாடிய கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சரும் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 81 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் மைக்கெல் லூயிஸ் 31 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பேட்ரியாட்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கயானா அணி தரப்பில் கேப்டன் இம்ரான் தாஹிர் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News