ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பரபரப்பான ஆட்டத்தில் பிஎன்ஜி-யை வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!

Updated: Sun, Jun 02 2024 23:27 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் சி குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அறிமுக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பப்புவா நியூ கினியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பப்புவா நியூ கினியா அணிய பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணிக்கு டோனி உரா - கேப்டன் அசாத் வாலா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி உரா இரண்டு ரன்னுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய லேகா சியாகவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து கேப்டன் அசாத் வாலாவுடன் இணைந்த செசே பாவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் அசாத் வாலாவும் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய ஹிரி ஹிரி ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செசே பாவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அமினி 12 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்திருந்த செசே பாவும் 50 ரன்களோடு நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சாத் சோப்பர் 10 ரன்களுக்கும், அலி நோவா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிப்ளின் டோரிகா 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பப்புவா நியூ கினியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களைச் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆண்ட்ரே ரஸல் மற்றும் அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். 

அதன்பின் பிரண்டனுடன் இணைந்த நிக்கோலஸ் பூரன் தொடக்கத்தில் தடுமாறினாலும் அவ்வபோது சிக்ஸர்களை விளாசி அசத்தினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக இந்த இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிக்கோலஸ் பூரன் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங் 34 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் - கேப்டன் ரோவ்மன் பாவெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க முயற்சித்தனர்.

பின்னர் 15 ரன்களில் ரோவ்மன் பாவெலும், 2 ரன்களில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் பின்னர் சேஸுடன் இணைந்த ஆண்ட்ரே ரஸல் அதிரடியாக விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணியும் இலக்கை நோக்கி நகர்ந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ்டன் சேஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 15 ரன்களையும் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை