ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

Advertisement

அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை ஒரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் 37 ரன்களுக்கு, ஷுப்மன் கில் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்து உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித்தும் 2 ரன்னுடனும் என ஜஸ்பிர்த் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் லபுஷாக்னேவுடன் இணைந்த டிராவிஸ் ஹெட் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் லபுஷாக்னே தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார்.  பின் 64 ரன்களில் லபுஷாக்னே ஆட்டமிழந்த நிலையில், மறுபக்கம் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது சசத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி உள்ளீட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்டும் 17 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 140 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். இதனால் அஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்ளை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேஎல் ராகுல் 7 ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி 11 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 28 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இந்திய அணி 105 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களைச் சேர்த்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் அட்டத்தை ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 15 ரன்னுடனும் களத்தில் தொடர்ந்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 28 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 7 ரன்களுக்கும், ஹர்ஷித் ரானா ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ரெட்டி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 என்களில் ஆட்டமிழக்க, இந்திய அணியும் 175 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Advertisement

இதனையடுத்து 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வினீ தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக்ஸ்வீனி 10 ரன்களையும், உஸ்மான் கவாஜா 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News