INDW vs WIW, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொணடிருந்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீராங்கனை கியானா ஜோசப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ஹீலி மேத்யூஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இந்திய வீராங்கனை ரேணுகா தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நிலையில், அடுத்து களமிறங்கிய டியாண்டிரா டோட்டினும் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ரேணுகா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஷமைன் கம்பெல் - சினலே ஹென்றி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்தனர்.
இதில் சினலே ஹென்றி தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷமைன் கம்பெல்லும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸைதா ஜேம்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில் மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த சின்னலே ஹென்றியும் 61 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் அலீயா அலீன் 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 4 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோலும் ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 29 ரன்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா மற்றும் ரிச்சா கோஷ் இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீப்தி சர்மா 39 ரன்களையும், ரிச்சா கோஷ் 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 28.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதில் தீப்தி சர்மா ஆட்டநாயகி விருதையும், ரேணுகா தாக்கூர் தொடர் நாயகி விருதையும் வென்றனர்.