ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தியது.கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே மற்றும் விருந்த தினேஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி  பவுண்டரியும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 66 ரன்களைக் கடந்த நிலையில், விருந்த தினேஷ் 16 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்கள் சேர்த்த கையோடு கிரண் நவ்கிரேவும் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின்  கேப்டன் தீப்தி சர்மா 7 ரன்களுக்கும், தஹ்லியா மெக்ராத் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீராங்கனை கிரேஸ் ஹாரிஸும் 12 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 118 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்வேதா செஹ்ராவத் - அறிமுக வீராங்கனை சினெல்லே ஹென்றி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சீரான வேகத்தில் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஸ்வேதா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த சினெல்லே ஹென்றி 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைக் குவித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அனபெல் சதர்லேண்ட் 2 விக்கெட்டுகளையும், மரிஸான் கேப், ஜேஸ் ஜோனசன், அருந்ததி ரெட்டி மற்றும் மின்னு மணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷஃபாலி வர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் ஜெமிமா ரோட்ரிக்ஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மெக் லெனிங் மற்றும் அனபெல் சதர்லேண்ட் இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மெக் லெனிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 12 பவுண்டரிகளுடன் 69 ரன்களைச் சேர்த்திருந்த மெக் லெனிங் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் சதலேண்டுடன் ஜோடி சேர்ந்த மரிஸான் கேப்பும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். 

Advertisement

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனபெல் சதர்லேண்ட் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும், மரிஸான் கேப் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் யுபி வாரியர்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News