ஐஎல்டி20 2024: குர்பாஸ், ரஸா அபாரம்; எமிரேட்ஸை பந்தாடியது கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ஐஎல் டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - வில் ஸ்மீத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் ஸ்மீத் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த வசீம் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் முகமது வசீம் அரைசதம் கடந்தார். அதேசமயம் ஆண்ட்ரே ஃபிளட்செர் 20 ரன்களிலும், மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த முகமது வசீம் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 21 ரன்களுக்கும், அம்பத்தி ராயுடு ஒரு ரன்னுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய டிம் டேவிட் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வார்னர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் குர்பாஸுடன் இணைந்த ஜேக் ஃபிரெசர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
பின் 4 பவுண்டரி, 4 சிச்கர்கள் என 54 ரன்களில் ஃபிரெசர் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 பவுண்டரி, 4 சிச்கர்களுடன் 81 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் - ரோவ்மன் பாவெல் இணை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தித்தியாசத்தில் எமிரேட்ஸை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது,