கெயில், ரோஹித் சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
India vs England 2nd Test: பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்ததுடன் 269 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் மெற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்த வீரர்கள்
- கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)
- ரோஹித் சர்மா (இந்தியா)
- ஷுப்மான் கில் (இந்தியா)
இதுதவிர்த்து இப்போட்டியின் மூலம் ஷுப்மன் கில் விராட் கோலியின் சாதனையையும் முறியடித்தார். அந்தவகையில் இந்திய அணியின் கேப்டனாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 254* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஷுப்மன் கில் 269 ரன்களை சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இந்திய கேப்டன்களின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள்
- ஷுப்மான் கில் - இங்கிலாந்துக்கு எதிராக 269, பர்மிங்காம் (2025)
- விராட் கோலி - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 254*, புனே (2019)
- விராட் கோலி - இலங்கைக்கு எதிராக 243, டெல்லி (2017)
- விராட் கோலி - இங்கிலாந்துக்கு எதிராக 235, மும்பை (2016)
- எம்எஸ் தோனி - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 224, சென்னை (2013)