வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18 ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்து வலிமையான தொடக்கத்தை பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

Advertisement

இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதானாஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 82 ரன்களையும், கேவம் ஹாட்ஜ் தனது சத்தைப் பதிவுசெய்ததுடன் 19 பவுண்டரிகளுடன் 120 ரகளையும் சேர்க்க இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் 23 ரன்களுடனும், ஜோஷுவா ட சில்வா 32 ரன்களுடனும் தொடந்தனர். 

இதில் ஜேசன் ஹோல்டர் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கெவின் சின்க்ளேர் 4 ரன்களிலும், அல்ஸாரி ஜோசப் 10 ரன்களிலும், ஜெய்டன் சீல்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ஜோஷுவா டா சில்வா மற்றும் ஷமார் ஜோசப் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், கடைசி விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஷுவா டா சில்வா 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 82 ரன்களைச் சேர்த்திருக்க, மறுமுனையில் ஷமர் ஜோசப் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 457 ரன்களைக் குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த பென் டக்கெட் - ஒல்லி போப் இணை மீண்டும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இந்த இன்னிங்ஸிலும் இருவரும் இணைந்து அரைசதம் அடித்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 119 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஒல்லி போப் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பென் டக்கெட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement

இதில் ஜோ ரூட் 37 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 78 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 207 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாள் நான்காம் நாள் ஆட்டத்தை தொடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News