வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ( ஜூலை 18) நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்து வலிமையான தொடக்கத்தை பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

Advertisement

இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கிரேக் பிராத்வைட் - மைக்கேல் லூயிஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மைக்கேல் லூயிஸ் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரேக் பிராத்வைத் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸியும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 84 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த அலிக் அதானாஸ் - கேவம் ஹாட்ஜ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதங்களை கடந்த அசத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 170 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.  

அதன்பின் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அலிக் அதானாஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 82 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேவம் ஹாட்ஜ் தனது சத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 19 பவுண்டரிகளுடன் 120 ரகளை எடுத்திருந்த நிலையில் கேவம் ஹாட்ஜும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் ஜோஷுவா டா சில்வா இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களைச் சேர்த்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 23 ரன்களுடன், ஜோஷுவா ட சில்வா 32 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 65 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News