ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டாமி பியூமண்ட் - ஏமி ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 22 ரன்களை எடுத்த நிலையில் டாமி பியூமண்ட் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஏமி ஜோன்ஸ் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் இணைந்த ஹீதர் நைட் மற்றும் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹீதர் நைட் அதிரடியாக விளையாடிய ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் நாட் ஸ்கைவர் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் அபாரமாக விளையாடி சதம் விளாசிய ஹீதர் நைட் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 109 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சாரணி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் பிரதிகா ராவல் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 24 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 10 பவுண்டரிகளுடன் 70 ரன்களை எடுத்த நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுரும், சதத்தை நெருங்கிய ஸ்மிருதி மந்தனா 88 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தீப்தி சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், அரைசதமும் கடந்தனர். பின் அவரும் 50 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சோபிக்க தவறினர். 

Also Read: LIVE Cricket Score

இதனால் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும், 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் சதம் விளாசிய ஹீதர் நைட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News