ஆஸி தொடரில் இருந்து கஸ் அட்கின்சனுக்கு ஓய்வு; மாற்று வீரராக ஒல்லி ஸ்டோனிற்கு வாய்ப்பு!

Updated: Tue, Sep 10 2024 13:12 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியானது சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. 

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியின் சீனியர் வீரர்களான மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் ஜோஷ் ஹல், ஜேக்கப் பெதெல், ஜான் டர்னர், டேன் மௌஸ்லி மற்றும் ஜோர்டன் காக்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணியின் அனுபவ வீரரான ஜோ ரூட்டிற்கு பணிச்சுமை காரணமாக இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. மேற்கொண்டு ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் மற்றும் மேத்யூ பாட்ஸ் உள்ளிட்டோருக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, ஒருநாள் அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணி அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி வந்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுறது. 

மேற்கொண்டு அடுத்ததாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாலும், கஸ் அட்கின்சனுக்கு இந்த ஓய்வானது வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அவருக்கான மாற்று வீரராக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோனிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜோஸ் பட்லர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், கஸ் அட்கின்சனிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒல்லி ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை