EN-W vs IN-W, 1st T20I: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற காணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் ஸ்மிருதி மந்தனா ஒருபக்கம் பவுண்டரிகளை பறக்கவிட மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த ஷஃபாலி வர்மா ஸ்டிரைக்கை மாற்றினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஷஃபாலி வர்மா 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோலும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஹர்லீன் தியோல் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்களைச் சேர்த்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 12 ரன்களுடனும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். மேற்கொண்டு சதமடித்து விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனாவும் 15 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 112 ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு சோபியா டங்க்லி மற்றும் டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேனியல் வைட் ரன்கள் ஏதுமின்றியும், சோபியா டங்க்லி 7 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் நாட் ஸ்கைவ்ர் பிரண்ட் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில் மறுமுனையில் களமிறங்கிய டாமி பியூமண்ட் 10 ரன்களுக்கும், ஏமி ஜோன்ஸ் ஒரு ரன்னிலும், அலிஸ் கேப்ஸி 5 ரன்னிலும், அர்லோட் 12 ரன்னிலும், எக்லெஸ்டோன் ஒரு ரன்னிலும் என நடையைக் கட்டினர். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த நாட் ஸ்கைவர் பிரன்டும் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவற அந்த அணி 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஸ்ரீ சாரனி 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா மற்றும் ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News