திறமை வாய்ந்தவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை - கௌதம் கம்பீர்!

Updated: Fri, Feb 24 2023 20:14 IST
Gautam Gambhir backs KL Rahul to do a Rohit (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே 2 – 0 (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம்  ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

முன்னதாக இத்தொடரில் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் வாய்ப்பு பெற்று களமிறங்கிய துணை கேப்டன் கேஎல் ராகுல் 20, 15, 1 என மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கொஞ்சமும் முன்னேறாத செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய அவர் 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்தார். 

ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக செயல்பட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் எழுந்த விமர்சனங்களால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன்ஷிப் பதவியை இழந்த அவருக்கு மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து வாய்ப்பு பெற்று தடுமாறும் அவர் மீது எழுந்த விமர்சனங்களை தவிர்ப்பதற்காக துணை கேப்டன் பதவியை மட்டுமே பிசிசிஐ பறித்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் சிறந்த தொடக்க வீரராக செயல்பட்டுள்ளதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்தார்.

ஆனால் அவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு ஷுப்மன் கில், சர்பராஸ் கான், குல்தீப் யாதவ் போன்ற உச்சகட்ட பார்மில் இருக்கும் வீரர்களுக்கு கொடுக்கப்படாதது ஏன் என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் உட்பட, முன்னாள் வீரர்கள் பலர் ராகுலை எதிர்த்து இந்திய அணி நிர்வாகத்தை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். 

இந்நிலையில் ராகுல் போன்ற திறமை வாய்ந்தவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆரம்பத்தில் தடுமாறினாலும் தற்போது கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ள ரோஹித் சர்மா போல வருங்காலத்தில் ராகுல் உயர்வார் என்று தெரிவிக்கும் அவர் அதுவரை விமர்சகர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கேஎல் ராகுலை பற்றி விமர்சிப்பவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் எவ்வளவு கடினம் என்பது தெரியாது. மேலும் ஒரு வீரர் சிறப்பாக செயல்படும் போது எப்படி பாராட்டுகிறோமோ அதே போல் சுமாராக செயல்படும் போதும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அத்துடன் வரலாற்றில் முதல் போட்டியிலிருந்து கடைசி வரை தொடர்ந்து ரன்களை அடித்த ஒரு வீரரின் பெயரை என்னிடம் சொல்லுங்கள் பார்ப்போம். 

எனவே அனைவரும் இது போன்ற மோசமான தருணங்களில் தடுமாறுவது சகஜம் என்பதால் திறமையானவர்களுக்கு நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக தனது கேரியரை மிகவும் மோசமாக தொடங்கிய ரோகித் சர்மா இப்போது எவ்வாறு செயல்படுகிறார் என்று பாருங்கள். அவரிடம் தற்போது மிகப்பெரிய மாற்றம் உள்ளது.

எனவே ஆஸ்திரேலிய தொடரின் நடுவே இது போன்ற விமர்சனங்கள் இருக்கக் கூடாது. 2 – 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கும் நிலையில் அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ராகுல் ரன்கள் அடிக்கிறாரா இல்லையா என்பது தெரியும். எனவே எந்த ஊடகங்களும் அல்லது முன்னாள் வீரர்களும் உங்களுடைய செயல்பாடுகள் சரியில்லை என்று அவரை குறை சொல்ல முடியாது. ஒவ்வொரு வீரரும் தங்களது தன்னிச்சையான செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். எனவே ராகுல் தரமான வீரர் என்பதால் அவரை விமர்சிக்காமல் தனியாக விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை