கோலிக்கு ஒரு நியாயம், ரோஹித்திற்கு ஒரு நியாயமா? - மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்த கம்பீர்!

Updated: Thu, Jan 12 2023 19:57 IST
Image Source: Google

ரோஹித் சர்மா சமகாலத்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். 2013ஆம் ஆண்டு வரை ஒருநாள் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் திணறிவந்த ரோஹித் சர்மா, 2013இல் ஒருநாள் அணியில் தொடக்க வீரராக விளையாட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக பேட்டிங் செய்து அசத்தினார். 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் ஓபனிங்கில் அசத்திய ரோஹித் சர்மா, அதே ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை விளாசி மிரட்டினார்.

அதன்பின்னர் 2014 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக 2 இரட்டை சதங்களை விளாசிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். மேலும் ஒருநாள் போட்டியில் 264 ரன்களை குவித்துள்ள ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் ஆவார்.

ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் திகழ்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 237 போட்டிகளில் விளையாடி 29 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 47 அரைசதங்களுடன் 9,554 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 148 போட்டிகளில் விளையாடி 4 சதங்களுடன் 3,853 ரன்களையும், 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும் 14 அரைசதங்களுடன் 3,137 ரன்களையும் குவித்துள்ளார்.

இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசிய கௌதம் கம்பீர், “கடந்த 4-5 ஆண்டுகளில் அதிகமான சதங்களை விளாசியுள்ளார் ரோஹித் சர்மா. 5-6 ஆண்டுகளுக்கு முன் இந்தளவிற்கு சீரான, நிலையான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. கடந்த 6-7 ஆண்டுகளில் 20 சதங்கள் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங்கைவிட ரோஹித் சர்மா கண்டிப்பாகவே சிறந்த பேட்ஸ்மேன். துணைக்கண்டங்களில் ரிக்கி பாண்டிங்கின் ரெக்கார்டு மோசமாக உள்ளது. ஆனால் ரோஹித் சர்மா எல்லா நாடுகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி தனது 45ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் அவரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசி வந்தனர். ஆனால் கௌதம் கம்பீர், விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட வேண்டாம். அவர் விளையாடிய காலம்வேறு, விராட் விளையாடும் காலம் வேறு என தனது கருத்தை பதிவுசெய்திருந்தார்.

இந்நிலையில்,  ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங்குடன், ரோஹித் சர்மாவை கௌதம் கம்பீர் ஒப்பிட்டு பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை