ஐசிசியின் பிட்ச் மதிபீட்டை சாடிய சுனில் கவாஸ்கர்!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்தூர் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்திற்கு ஐசிசி மோசம் என தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டத்தின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தே பேட்ஸ்மேன்கள் கணிக்க முடிய வில்லை என்று போட்டி நடுவர் கிறிஸ் பிராட் குற்றச்சாட்டு இருந்தார்.
மேலும் ஆடுகளத்தின் முதல் நாள் தன்மை மூன்றாவது நான்காவது நாள் போல் இருந்ததாகவும், பேட்டிற்கும் பந்திற்கும் சரிசமமான சாதகம் இல்லாமல் ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் போட்டி நடுவர் குற்றச்சாட்டு இருந்தார்.
இதனால் இந்தூர் ஆடுகளத்திற்கு மூன்று மைனஸ் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு மைதானம் மைனஸ் 5 புள்ளிகளை பெறுகிறதோ அவர்களால் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியையும் அடுத்த 12 மாதங்களுக்கு நடத்த முடியாது என்பது விதி. இந்த நிலையில் ஐசிசி யின் இந்த முடிவுக்கு கவாஸ்கர் கடும் குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், “ஒரு விஷயம் மட்டும் எனக்கு தெரிந்தாக வேண்டும். கடந்த நவம்பர் மாதம் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதிய ஆட்டம் இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது. அதற்கு ஐசிசி எத்தனை புள்ளிகள் வழங்கி இருக்கிறார்கள். அப்போதைய போட்டி நடுவர் யார்? மூன்று மைனஸ் புள்ளிகள் என்பது மிகவும் கடுமையான முடிவு என நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் ஆடுகளத்தில் பந்து திரும்பியது. எனினும் அபாயகரமாக செயல்படவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் கடைசி இன்னிங்ஸில் விளையாடும் போது ஒரே ஒரு விக்கெட்டை இழந்து 77 ரன்கள் அடித்திருந்தார்கள். இதன் மூலம் ஆடுகளம் எந்த அளவிற்கு அபாயகரமாக இல்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்” என்று கவாஸ்கர் சாடியுள்ளார்.
கவாஸ்கர் சொன்ன போட்டியில் பிரிஸ்பேன் ஆடுகளத்திற்கு ஐசிசி சராசரிக்கும் கீழ் என்ற அந்தஸ்தை மட்டுமே வழங்கி இருந்தது. மேலும் எந்த மைனஸ் புள்ளிகளும் வழங்கப்படவில்லை. இதனால் இரண்டு நாட்களுக்கு கீழ் நடந்த போட்டியை சராசரிக்கு கீழ் எனக் கொடுத்த ஐசிசி மூன்று நாட்கள் நடந்த போட்டிருக்கு ஏன் மோசம் என மூன்று மைனஸ் புள்ளிகளை வழங்கி இருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.