ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன் நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதன்படி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ரியான் பராக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது மூன்றவாது தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி, இன்னிங்ஸின் கடைசி பந்தை 157.4 கி.மீ வேகத்தில் வீசி அசத்தினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய வீரர் எனும் மயங்க் யாதவின் சாதனையை கோட்ஸி முறியடித்துள்ளார். முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அறிமுகமான மயங்க் யாதவ் 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசியதே நடப்பு சீசனில் வீசப்பட்ட அதிவேகமான பந்துவீச்சாக இருந்தது. 

அதனை தற்போது மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜெரால்ட் கோட்ஸி 157.4 கி.மீ வேகத்தில் பந்துவீசி முறியடித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் வீசப்பட்ட இரண்டாவது அதிவேகமான பந்துவீச்சாகவும் இது பதிவானது. முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் 157.7 கி.மீ வேகத்தில் வீசிய பந்தே இதுநாள் வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசிய வீரர்கள்

  • ஷான் டைட்(ராஜஸ்தான் ராயல்ஸ்) - 157.7 கி.மீ - 2011
  • ஜெரால்டு கோட்ஸி(மும்பை இந்தியன்ஸ்) - 157.4 கி.மீ - 2024
  • லோக்கி ஃபெர்குசன்(கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 157.3 கி.மீ - 2022
  • உம்ரான் மாலிக்(சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 157 கி.மீ - 2022
  • ஆண்ட்ரிச் நோர்ட்ஜே(டெல்லி கேப்பிட்டல்ஸ்) - 156.22 கி.மீ - 2020
  • உம்ரான் மாலிக்(சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 156 கி.மீ - 2022
  • மயங்க் யாதவ்(லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 155.8 கி.மீ - 2024
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News