ஐசிசி மாதாந்திர விருதுகள்: மே மாதத்திற்கான விருதை வென்றனர் மோட்டி, அத்தபத்து!

Updated: Thu, Jun 13 2024 20:40 IST
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மே மாதத்திற்கான விருதை வென்றனர் மோட்டி, அத்தபத்து! (Image Source: Google)

சர்வதேச  கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்திருந்தது.

அதன்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக பந்துவீசிய  பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி இரண்டாவது முறையாக பரிந்துரை செய்யப்பட்டிருந்தா. மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி மற்றும்  பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்து வீரர் லோர்கன் டக்கர் ஆகியோரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி வென்றுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய குடகேஷ் மோட்டி, அத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்யவும் முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக அவருக்கு அத்தொடரின் தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, 

அதேபோல் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபட்டு, ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸ், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இதில் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தப்பத்து மே மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதினை வென்று அசத்தியுள்ளார். 

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் அபாரமாக விளையாடிய சமாரி அத்தபத்து சதமடித்து அசத்தியதுடன், பந்துவீச்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி தகுதிபெற்றதற்கும் இவரது பங்களிப்பானது இன்றியமையாதது என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை