
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி இரண்டாவது முறையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவரைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி மற்றும் பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்து வீரர் லோர்கன் டக்கர் ஆகியோரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபட்டு, ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸ், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதன்படி ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் அபாரமாக விளையாடிய சமாரி அத்தபத்து சதமடித்து அசத்தியதுடன், பந்துவீச்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.