WPL 2023: ஹர்மன்ப்ரீத் அதிரடி அரைசதம; 207 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Sat, Mar 04 2023 21:40 IST
GUJ W Vs MI W: MI Skipper Harmanpreet Hammers First Fifty Of WPL 2023 (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் இன்று மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீராங்கனைகளாக யஷ்திகா பாட்டியா - ஹீலி மேத்யூஸ் இணை களமிறங்கியனர். இதில் யஷ்திகா பாட்டியா ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த நாட் ஸ்கைவரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஹீலி மேத்யூஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூஸ் 31 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஆனால் மறுமுனையில் பவுண்டரிகளால் எதிரணி பந்துவீச்சாளர்களை பதம்பார்த்த ஹர்மன்ப்ரீத் கவுர் 22 பந்துகளில்ல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி வந்த ஹர்மன்பரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளை விளாசி 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனாலும் சற்றும் தனது அதிரடியை குறைக்காமல் விளையாடி வந்த அமிலியா கெர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக பூஜா வஸ்திரேகர் 15 ரன்களை சேர்க்க, கடைசி பந்தை எதிர்கொண்ட இஸி வோங் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார். 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் ஸ்நே ரானா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்லே கார்ட்னர், கன்வர், ஜார்ஜியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை