இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலின் முதலிடம் வகித்து வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேற்கொண்டு ஒரு போட்டியில் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் செயல்பாடுகள் இந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக உள்ளது.
இந்நிலையில் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும் என்றும், ரோஹித் சர்மாவுக்கு பிறகு அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் பார்ம் தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரமானது என்பதற்கான சான்று.
ஜெய்ஸ்வால் மற்றும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற வேண்டும். அதுமட்டுமின்றி ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்தியா அணியின் அடுத்த டி20 கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் உள்ளாதா...?” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவானது தற்போது வைரலாகியுள்ளது.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடிய 8 போட்டிகளில் 62.80 என்ற சராசரியுடன் 314 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்களும் அடங்கும். மேலும் இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சஞ்சு சாம்சன் நான்காம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.