துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் விலக்கப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான அணியை பிசிசிஐ அறிவிக்காமலேயே இருந்தது. அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சேத்தன் சர்மா இல்லாமல் மற்ற தேர்வுக்குழுவினர் வீரர்களை தேர்வு செய்திருக்கின்றனர்.
இந்த முறை ரசிகர்கள் பலரும் கோரி வந்ததை போல கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியின் துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக புறகணிக்கப்பட்டுள்ளார் என்ற காரணங்களையும் பிசிசிஐ கொடுக்கவில்லை. எனினும் மோசமான ஃபார்மில் இருக்கும் அவருக்காக இன்னும் ஷுப்மன் கில்லை புறகணிக்க முடியாது என்பதற்காகவே நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். அதில், “கேஎல் ராகுல் இனியும் துணைக்கேப்டன் கிடையாது என நினைக்கிறேன். ஷுப்மன் கில்லை எப்படியாவது அடுத்த போட்டியில் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக துணைக்கேப்டனை நீக்கியுள்ளனர். கேஎல் ராகுலின் விக்கெட்களை பார்த்தாலே தெரிகிறது அவர் மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த வீரர் தான். ஆனால் அவரின் தனது தவறுகளை சரிசெய்தே தீர வேண்டும்.
இது கேஎல் ராகுலுக்கு சிறந்த வாய்ப்பாகும். இந்த கால அவகாசத்தை நன்காக பயன்படுத்திக்கொண்டு அழுத்தத்தில் இருந்து வெளிவர வேண்டும். உள்நாட்டு போட்டிகளில் விளையாடி, நன்கு நம்பிக்கை வரும் வகையில் ரன் குவித்துவிட்டு இந்திய அணிக்கு வர வேண்டும். கேஎல் ராகுல் போன்ற வீரர் கண்டிப்பாக தேவை. எனவே அவரை ஃபார்முக்கு கொண்டு வாருங்கள். ஷுப்மன் கில் ஒரு சூப்பர் ஹீரோ, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20ல் கலக்கியதை போலவே டெஸ்டிலும் கலக்குவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்ட போதும், அவரின் துணைக்கேப்டன் பொறுப்பை யார் ஏற்பார் என அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் துணைக்கேப்டன் பொறுப்பை கொடுக்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் சட்டீஸ்வர் புஜாரா கேப்டன்சி பதவிக்கு கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.