ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது முடிவடைந்துள்ள நிலையில், டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி புதுபிக்கப்பட்ட டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலின் முதல் 5 இடங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதன்படி ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர்.
மேற்கொண்டு இங்கிலாந்தின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 4 மற்றும் 5ஆம் இடங்களில் தொடர்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறியதுடன் 8 மற்றும் 9ஆம் இடங்களுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புதுபிக்கப்பட்ட டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே 7 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்பட்டியலின் முதலிடத்தில் இங்கிலாந்தின் ஆதில் ரஷித் நீடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இப்பட்டியலின் டாப் 10 இடங்களில் இந்திய அணியின் அக்ஸர் படேல் 7 ஆம் இடத்தையும், குல்தீப் யாதவ் 9ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஐசிசி ஆடவர் டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐசிசிச் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட்டிங், பௌலிங் என இரு துறைகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய போட்டியின் கடைசி ஓவரையும் அபாரமாக வீசி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
அதுமட்டுமின்றி இந்தாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களையும், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 100+ ரன்கள் மற்றும் 10+ விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆல்ரவுண்டர் எனும் சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவர் தற்போது ஆல் ரவுண்டர்கள் தரவரிசையிலும் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.
மேற்கொண்டு ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இலக்கை அணியின் வநிந்து ஹசரங்கா இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். மேற்கொண்டு ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மூன்றாம் இடத்திற்கும், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ரஸா 4ஆம் இடத்திற்கும், வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த ஆஃப்கான் அணியின் முகமது நபி 4 இடங்கள் பின் தங்கி 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.