இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 60 ரன்களையும், ரிச்சா கோஷ் 30 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரமா ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இதில் சமாரி அத்தபத்து 61 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 69 ரன்களையும், கவிஷா தில்ஹாரி 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி ஆசிய கோப்பை தொடர் வரலாற்றில் தங்கள் முதல் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப்படைத்தது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஹர்ஷிதா சமரவிக்ரமா ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து தொடர் நாயகி விருதையும் வென்றனர்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து அணியின் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “நாங்கள் இத்தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சற்று தடுமாறினோம் என நினைக்கிறேன். இறுதியில் அதற்கான விலையையும் நாங்கள் கொடுத்துள்ளோம். இன்றைய போட்டியில் பேட்டிங்கில் நாங்கள் போதுமான ரன்களைச் சேர்த்தாகவே நினைக்கிறேன்,
அதிலும் பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், அத்னபின் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் இலங்கை அணியும் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அவர்கள் நீண்ட காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள், இந்த போட்டி முழுவதும் அவர்கள் நன்றாக விளையாடினர்” என்று தெரிவித்துள்ளார்.