கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும் - ஜஸ்பிரித் பும்ரா

Updated: Tue, Jun 17 2025 20:35 IST
கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும் - ஜஸ்பிரித் பும்ரா
Image Source: Google

ENG vs IND Test Series: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமக்கு ஏன் கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார். 

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி ஹெடிங்க்லேவில் நடைபெறவுள்ளது. மேலும் இது 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்ச்சியில் இரு அணிகளின் முதல் தொடர் என்பதால் ரசிகர்களுடையை எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். இதனால் இங்கிலாந்து தொடரில் யார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்விகள் இருந்தன. மேலும் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரிடையே கேப்டன்சிக்கான கடும போட்டி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

மேலும் இதில் ஜஸ்பிரித் பும்ரா தான் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என பலரும் கணித்த நிலையில், காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படாது என்ற தகவல்கள் வெளியானது. அதன்பின் இந்திய டெஸ்ட் அணியின் புது கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டு இந்திய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தனக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது குறித்து பேசியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, “ஐபிஎல் தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித்தும் விராட்டும் ஓய்வு பெறுவதற்கு முன்பு, இங்கிலாந்து தொடரில் எனது பணிச்சுமை குறித்து பிசிசிஐயிடம் பேசினேன். இந்த தொடரில் எனது பணிச்சுமை குறித்து நான் மருத்துவக் குழுவினருடன் கலந்துரையாடியதாகக் கூறினேன். அதனால் நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.

எனவே நான் பிசிசிஐயிடம், ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் என்னால் விளையாட முடியாது என்பதால், அணியின் கேப்டன் போறுப்பை ஏற்க விரும்பவில்லை என்று கூறினேன். ஆமாம், பிசிசிஐ என்னை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க இருந்தது. ஆனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றில் நானும் மற்ற போட்டிகளில் வேறொருவரும் அணியை வழிநடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. 

Also Read: LIVE Cricket Score

மேலும் நான் எப்போதும் அணியை முதன்மைப் படுத்தவே விரும்பினேன். மேலும் அணியின் கேப்டனாக இல்லாமல் நான் ஒரு வீரராக நிறைய விஷயங்களை செய்ய விரும்புகிறேன். ஏனெனில் கேப்டன் பதவி என்பது ஒரு பதவி மட்டுமே, ஆனால் அணியில் எப்போதும் தலைவர்கள் இருப்பார்கள். நான் அதைத்தான் செய்ய விரும்புகிறேன். எனக்கு கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை