அணி பேருந்தை தவறவிட்டது கொஞ்சம் சங்கடமாக இருந்தது - ஜார்ஜ் லிண்டே!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
அதன்படி, நேற்று நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே இணை அதிரடியாக விளையாடியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் டேவிட் மில்லர் 82 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 48 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை போராடி 71 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக பேட்டிங்கில் 48 ரன்களையும் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியா ஜார்ஜ் லிண்டே ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலைலையில், இப்போட்டிக்கு முன்னதாக அணி பேருந்தை தவற விட்டதாகவும், அதன்பின் காவல்துறையின் உதவியுடன் மைதானம் வந்தடைந்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் ஜார்ஜ் லிண்டே சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜார்ஜ் லிண்டே, “சில காரணங்களால், எனது தொலைபேசி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக காட்டியது. அதனால் நான் எனக்குள், 'சரி, நாம் 4 மணிக்கு நான் கீழே சென்று பேருந்தில் சீக்கிரமாக ஏறிவிடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன். பின்னர் நான் ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் பேருந்து கிளம்புவதைப் பார்த்தேன், அப்போது அந்த உணர்வு எனக்குச் சரியானதாக இல்லை. நல்லவேளையாக காவல்துறையின் உதவின் மூலம் நான் பேருந்தில் ஏறினேன்.
Also Read: Funding To Save Test Cricket
உண்மையில் நான் பேருந்தில் இல்லை என்பதை யாரும் உணரவில்லை, உண்மையில் இந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது. இது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், அடுத்த ஆட்டத்திற்கும் நான் மீண்டும் தாமதமாக வரலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் இப்போட்டியில் நான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை தவறவிட்டதை தவிர்த்து மற்ற அனைத்தும் எனது சிறப்பான கம்பேக்கிற்கு உதவியாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.