ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணிக்கு அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுத்தனர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 92 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 11 பவுண்டரிகளுடன் 88 ரன்களைச் சேர்த்திருந்த விராட் கோலியும் மதுஷங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து இணைந்த கேஎல் ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேஎல் ராகுல் 21 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இருப்பினும் மறுபக்கம் அதிரடியைக் கைவிடாத ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின்னும் அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம் இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கா தனது 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 

இறுதியில் ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களைச் சேர்த்து பினிஷிங் கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 10 ஓவர்களை வீசி 80 ரன்களைக் கொடுத்தாலும், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதையடுத்து, 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி முதலிரண்டு ஓவர்களிலேயே அணியின் மொத்த பலத்தையும் இழந்தது. அதன்படி ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பதும் நிஷங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் 2ஆவது ஓவரை வீசிய முகமது சிராஜ் தனது முதல் பந்தில் திமுத் கருணரத்னேவை வழியனுப்ப, அதே ஓவரின் 5ஆவது பந்தில் சதீரா சமரவிக்ரமாவின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் சிராஜிடம் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்கா ஒரு ரன்னிலும், அடுத்து வந்த துஷன் ஹெமந்தா முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இலங்கை அணி முதல் பத்து ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 14 ரன்களை மட்டுமே எடுத்தது.

Advertisement

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா ஆகியோரது விக்கெட்டுகளையும் முகம்து கைப்பற்றி அசத்தினார். மேலும் இது முகம்து ஷமியின் 5ஆவது விக்கெட்டாகவும் பதிவானது. இதனால் இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை பந்தாடி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிச் சுற்றுக்கும் இந்திய அணி முன்னேறி சாதித்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News