வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் 14 மாதங்கள் கழித்து நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement

ஏனெனில் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அவர்களை கழற்றி விட்டு இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணி விளையாடும் என்ற செய்திகள் வெளியானது. அதற்கு தகுந்தார் போல் அவர்களும் கடந்த ஒன்றரை வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தனர். இருப்பினும் தற்போது அணிக்கு திரும்பியுள்ளதால் அவர்கள் மீண்டும் டி20 உலகக் கோப்பையில் கடைசி முறையாக விளையாடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் எளிதில் கணிக்க முடியாததாக இருக்கும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே அதில் அசத்துவதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் மிகுந்த வீரர்கள் இந்தியாவுக்கு தேவை என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “உலகக் கோப்பை மைதானங்களை நீங்கள் பார்க்கும் போது அங்குள்ள பிட்ச்கள் மிகவும் ட்ரிக்கியாக இருக்கும். அங்கே இந்தியாவுக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் தேவை. விரைவில் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்கள் அடிக்க உள்ளார். எனவே அவர் இருப்பது இந்திய பேட்டிங் துறைக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும். அவர்கள் இருவரும் அணியில் இருப்பது டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பையும் அதிகப்படுத்தும்.

2023 உலகக் கோப்பையில் அவர்களுடைய ஃபார்ம் நன்றாக இருந்தது. ரோஹித் சர்மா கேப்டனாக அணியில் அதிரடியாக விளையாடும் எண்ணத்தை கொண்டு வந்துள்ளார். விராட் கோலி 3ஆவது இடத்தில் விளையாடுவார் என்று நினைக்கிறேன். குறிப்பாக அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் உள்ள மைதானங்களில் அவருடைய பேட்டிங் இந்திய அணியில் திடத்தை கொண்டு வரும்.

நம்முடைய அணியில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், கில் போன்ற பயமற்ற இளம் வீரர்களும் இருக்கின்றனர். ஆனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தான் உங்களுக்கு அணியில் திடத்தை கொடுப்பார்கள். குறிப்பாக உலகக் கோப்பை போன்ற அழுத்தமான பெரிய தொடர்களில் இலக்கை சேசிங் செய்யும் போது அந்த இருவருடைய பங்கு முக்கியமாகும்” என்று கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News