ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்ட்ரிஸ் கஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஜோ கிளார்க்கும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கைல் மேயர்ஸுடன் இணைந்த ரோஸ்டன் சேஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கைல் மேயர்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது.

Advertisement

மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஸ்டன் சேஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த கைல் மேயர்ஸும் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜேசன் ஹோல்டர் 26 ரன்களையும், சுனில் நரைன் 17 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் ஆடம் மில்னே, ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வாரியர்ஸ் அணிக்கு டாம் கொஹ்லர் காட்மோர் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 66 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த டாம் கொஹ்லர் காட்மோர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரொஹன் முஸ்தஃபா 5 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். 

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜான்சன் சார்லஸ் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டிம் செஃபெர்ட், ஆஷ்டன் அகர் ஆகியோர் ஓரளவு ரன்களைச் சேர்க்க ஷார்ஜா வாரியர்ஸ் அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஸாம்பா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News