விராட் கோலி இந்த தியாகத்தை செய்தாக வேண்டும் - ரவி சாஸ்திரி!

Updated: Thu, Jan 19 2023 19:13 IST
IND v AUS 2023: Ravi Shastri shares crucial advice for Virat Kohli ahead of Australia Tests (Image Source: Google)

இலங்கை அணியுடனான தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மோதவுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியும் கண்டுவிட்டது.

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் வரவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் தான் இந்த போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால் இந்தியாவுக்கோ 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை மட்டுமின்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் உள்ளது.

நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் இந்திய அணி அஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்கவுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த தொடரில் வெற்றி பெற வேண்டும், அல்லது சமனில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

இந்நிலையில் இதற்காக விராட் கோலி தியாகம் செய்ய வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒரு வீரர் அதிகப்படியாக முதல் தர கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என நான் நம்புவேன். ஆனால் இந்தியாவில் தற்போதுள்ள டாப் வீரர்கள் முதல் தர போட்டிகளில் விளையாடுவதில்லை. நிறைய போட்டிகள் தலைக்கு மேல் இருக்கிறது, அங்கு சென்று ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கலாம். ஆனால் அதை விட முக்கியமான ஒன்று உள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன் சச்சின் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளுடன் விளையாட சென்றார். அப்போது இரட்டை சதமும் அடித்திருந்தார். ஆனால் அடுத்த 2 மாதங்களில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1000 சர்வதேச ரன்களை அசால்ட்டாக குவித்திருந்தார். இதே போன்ற சூழல் கோலிக்கும் தற்போது வந்துள்ளது. அடுத்ததாக வரவுள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்காக கோலி உள்நாட்டு போட்டிகளில் விளையாட செல்ல வேண்டும்.

அதாவது ரஞ்சிக்கோப்பை தொடரில் டெல்லி அணிக்கான போட்டி ஜனவரி 24ஆம் தேதி உள்ளது. அன்றைய தினம் இருக்கும் நியூசிலாந்துடனான 3ஆவது ஒருநாள் போட்டியை புறக்கணித்துவிட்டு, ரஞ்சிக்கோப்பை போட்டிக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று சிறப்பாக விளையாடி நம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், ஆஸ்திரேலியாவை சமாளிக்க சுலபமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை