IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் மிதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இடது கை சுழற்பந்து வீச்சாளர் மாத்யூ குன்னமான் இந்தியாவுக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடன் இன்னொரு சுழற்பந்து வீச்சாளரான அஷ்டன் அகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அகர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவர் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் முதல் டெஸ்டில் சொதப்பிய டேவிட் வார்னருக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட் இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரும் அணியில் இணைந்தால் இந்தியாவுக்குக் கடுமையான போட்டியைத் தர முடியும் என்று ஆஸ்திரேலியா எதிர்பார்க்கிறது. அதேபோல மிட்டசல் ஸ்டார்க்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.