ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த கிளென் மேக்ஸ்வெல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சாதனை ரோஹித் சர்மாவின் பெயரில் இருந்தது. தற்போது அந்த சாதனையை ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். நேற்று கௌகாத்தியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார்.
நேற்றைய இன்னிங்ஸில் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்தார். இதன்மூலம் மேக்ஸ்வெல் டி20 சர்வதேச வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர் ரோஹித் சர்மாவை சமன் செய்துள்ளார். ரோஹித் சர்மா சர்வதேச டி20 வடிவத்தில் அதிகபட்சமாக 4 சதங்களை அடித்துள்ளார், இப்போது ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் தனது 4 டி20 சதங்களுடன் ரோஹித்துக்கு சமமாக வந்துள்ளார்.
ரோஹித் சர்மா 140 டி20 இன்னிங்ஸ்களில் நான்கு சதங்கள் அடித்துள்ள நிலையில், மேக்ஸ்வெல் இந்த சாதனையை 92 டி20 இன்னிங்ஸ்களில் அடித்து அசத்தியுள்ளார். சர்வதேச டி20யில் மேக்ஸ்வெல்லின் சிறந்த ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 145 ரன்களும், ரோஹித் சர்மாவின் சிறந்த ஸ்கோர் 118 ரன்களும் ஆகும். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 3 சதங்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
டி20 வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்:
- கிளென் மேக்ஸ்வெல் - 4 சதங்கள்
- ரோஹித் சர்மா - 4 சதங்கள்
- பாபர் ஆசாம் - 3 சதங்கள்
- காலின் முன்ரோ - 3 சதங்கள்
- சூர்யகுமார் யாதவ் - 3 சதங்கள்
- முகமது வாசீம் - 2 சதங்கள்
- பிரண்டன் மெக்கலம் - 2 சதங்கள்
- ஆரோன் ஃபின்ச் - 2 சதங்கள்