அடுகளம் குறித்த ஆஸியின் கருத்துக்கு ரோஹித் சர்மா பதிலடி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக கடந்த ஒருவார காலமாக இரு அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டனர்.
மேலும் இத்தொடரை 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறமுடியும் என்ற சூழலில் களமிறங்கவுள்ளது.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணி கடந்த 2004ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் திணறி வருவதால், இம்முறை அதனை மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தியாவின் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தை குறித்து தீவிரமாக பேசி வருகிறது. இதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர்களும் துணை நிற்கின்றனர்.
இந்தச் சூழலில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், “கவனம் ஆட்டத்தில் இருக்க வேண்டும். ஆடுகளத்தில் அல்ல. இரு அணிகளையும் சேர்ந்த திறன் படைத்த 22 வீரர்கள் பார்டர் - கவாஸ்கர் தொடரில் பலப்பரீட்சை செய்ய உள்ளனர்.
சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆட ஒரு திட்டம் வேண்டும். ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய வேண்டும். இந்தத் தொடர் மிகவும் சவாலானது. அதை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் நாங்கள் உள்ளோம். ஆடும் லெவனை பொறுத்தவரையில் திறன் படைத்த வீரர்களையும் தவிர்க்க வேண்டிய சூழல் உள்ளது. நிச்சயம் அதில் துணிச்சலான முடிவை நாங்கள் எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.