இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இர்னடாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அரைசதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 38 ரன்களையும், ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தர்.
அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடி வந்த டெவான் கான்வே 17 ரன்களிலும், வில் யங் 23 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 9 ரன்களிலும், டேரில் மிட்செல் 18 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லேதமும் 86 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பிளெண்டல் மற்றும் பிலீப்ஸ் தொடர்ந்தனர்.
இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் பிளெண்ட 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மிட்செல் சாண்ட்னர், டிம் சௌதீ, அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இதில் கிளென் பிலீப்ஸ் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியில் ரோஹித் சர்மா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 46 ரன்களுடனும், ஷிப்மன் கில் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.