IND vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களையும், ரிஷப் பந்த் 56 ரன்களையும் சேர்த்தனர். விண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் அந்த அணியில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 34 ரன்களையும், அதிரடியாக விளையாடிய ஓடியன் ஸ்மித் 36 ரன்களையும் சேர்த்தனர்.
ஆனாலும் அந்த அணி 37.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.