சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

Updated: Sun, Feb 06 2022 22:12 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு சுருண்டது. 

177 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி அரைசதம் (51 பந்தில் 60 ரன்கள்), இஷான் கிஷன் (28), சூர்யகுமார் யாதவ் (34) ஆகியோரின் பங்களிப்பால் எளிதாக இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் விராட் கோலி வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. சதமடிக்க முடியாமல் 2 ஆண்டுகளாக திணறிவருகிறார்.

எனவே இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார் விராட் கோலி.

ஆனால் அதிலும் ஒரு சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. இந்த 8 ரன்னுடன் சேர்த்து, இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்ததில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 2ஆம் இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் 5000 ரன்களை அடித்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் ஜாக் காலிஸ் ஆகிய மூவருக்கு அடுத்து 4ஆம் இடத்தில் உள்ளார் விராட் கோலி.

  • சச்சின் டெண்டுல்கர் (6976 ரன்கள் - இந்தியாவில்)
  • ரிக்கி பாண்டிங் (5521 ரன்கள் - ஆஸ்திரேலியாவில்)
  • ஜாக் காலிஸ் (5186 ரன்கள்  - தென் ஆப்பிரிக்காவில்)
  • விராட் கோலி (5002* ரன்கள் - இந்தியாவில்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை