ENG vs IND: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் எழுந்தன. மேலும் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற குழப்பமும் நீடித்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரமே ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன்கள் என்ற தகவல் வெளியான நிலையில் இன்றைய தினம் பிசிசிஐ அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேசமயம் அணியின் அனுபவ வீரர்களான கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சாதாரண வீரர்களாக மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக பும்ரா செயல்பட்டு வந்த நிலையில் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் கேஎல் ராகுலும் கேப்டன்சிகான தேர்வில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து இந்திய டெஸ்ட் அணியில் உள்ளூர் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் கருண் நாயர், தமிழ்நாடு வீரர் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது. மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
அதேசமயம் அக்ஸர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமிக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேற்கொண்டு சர்ஃப்ராஸ் கான், நிதீஷ் ரானா உள்ளிட்டோரும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ரஜத் படிதார், தனுஷ் கோட்டியான் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.