இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது. இதில் அக்ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு குயின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து குயின்டன் டி காக் 39 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதன்பின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருக்கு முயற்சிக்க பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்தார். அப்போதே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது.
பின்னர் களமிறங்கிய காகிசோ ரபாடா 5ஆவது பந்தில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றியின் மூலம் வரலாற்று சாதனையையும் படைத்து அசத்தியுள்ளது. அதன்படி தொடர் முழுவதும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல், டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி பெற்றுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. குரூப் சுற்றில் கனடாவுக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் முழுமையாக ரத்தானது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தலா இரண்டு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற முதல் அணி எனும் சாதனையையும் இந்திய அணி தனதாக்கியுள்ளது. அதன்படி, 1983 மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை, 2007 & 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2002 & 2014ஆம் ஆண்டும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்துவிதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணி தலா இரண்டு முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.