டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் - திசாரா பெரேரா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா - கனாடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதேசமயம் இந்திய அணி இடம்பிடித்துள்ள குழுவில், பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏதேனும் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஏதாவது சிறப்பான நிகழ்வை நிகழ்த்தும் என்று நான் உணர்கிறேன். ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையில் அவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடைப் போட்டதை பார்த்தோம். அதே போல இந்த டி20 உலகக் கோப்பையிலும் அவர்கள் ஏதேனும் சிறப்பாக செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.
நான் எப்போதும் முதிர்ச்சியான வீரர்களை விரும்புவேன். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று நினைக்கிறேன். எனவே உலகக் கோப்பைக்கு முன், கேப்டன் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இத்த்தொடரில் பங்கேற்பதையே நான் விரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 அணியில் சேர்க்கப்படாமல் இருந்தனர். இதனைத்தொடர்ந்து நடப்பாண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா அணியை வழிநடத்தினார். மேலும் வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் ரோஹித் சர்மாவே இந்திய அணியை வழிநடத்துவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்த குறிப்பிடத்தக்கது.