பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இந்திய அணிக்கு அபராதம்; புள்ளிப்பட்டியலில் பின்னடைவு!

Updated: Fri, Dec 29 2023 12:46 IST
Image Source: Google

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது.

இதில் வரிசையாக இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்து கடைசியாக தனது விக்கெட்டை இழந்தார். பின் வரிசை வீரர்கள் மொத்தமாக 16 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றியோடு முடித்த இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டை தோல்வியோடு முடித்துள்ளது.

அதோடு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், இந்த முறையும் அந்த வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

அதன்படி இந்திய அணி குறிப்பிட்டநேரத்தில் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியதால் போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் 2 புள்ளிகளை இழப்பீடாகவும் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. இதனால் 16 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 14 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

 

அதன்படி இப்பட்டியளில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்திலும், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இதனால் இந்திய அணி அடுத்து நடைபெறும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய வெற்றிகளைப் பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை