நல்ல திறமை இருந்தும் இந்திய அணியால் குறைந்த வெற்றிகளையே பெற்றுள்ளது - மைக்கேல் வாகன்!

Updated: Fri, Dec 29 2023 22:49 IST
Image Source: Google

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் தோல்வியை சந்தித்த இந்தியா முதல் முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

முன்னதாக இந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சாம்பியன் பட்டத்தை நழுவ விட்ட இந்தியா 2023 உலகக் கோப்பையிலும் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா இறுதிப்போட்டியில் சொதப்பி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

அந்த தோல்வியை தென் ஆப்பிரிக்க தொடரிலாவது ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்துள்ளது. இந்நிலையில் உலகிலேயே திறமைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத போதிலும் இந்தியா மட்டுமே குறைவான சாதனை வெற்றிகளை பெற்று வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சமீப காலங்களில் அவர்கள் பெரிய வெற்றிகளை பெறவில்லை. இந்த உலகிலேயே இந்தியா தான் மிகவும் குறைவான சாதனை வெற்றிகளை பெறும் விளையாட்டு அணி என்று நினைக்கிறேன். அவர்கள் எதையும் வெல்லவில்லை. கடைசியாக அவர்கள் எப்போது மகத்தான வெற்றியை பெற்றார்கள்? ஆஸ்திரேலியாவில் 2 முறை வென்றார்கள். அது அபாரமானதாகும். ஆனால் அதன் பின் அவர்கள் கடந்த சில உலகக் கோப்பைகளில் அசத்தவில்லை. 

தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு நீங்கள் பயனுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றுள்ளீர்கள். ஆனால் அங்கேயும் இப்படி ஒரு செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். என்னைக் கேட்டால் அவர்கள் நல்ல அணியாக இருக்கிறார்கள். அவர்களிடம் அனைத்து விதமான திறமையும் வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அதை வைத்து அவர்கள் பெரிய அளவில் வென்று விட்டார்கள் என்று நான் கருதவில்லை” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை